ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஜவான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்க, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது காணலாம். பெண் கைதிகளின் ஜெயிலராக இருக்கிறார் ஆசாத்(ஷாருக்கான்). இவர் தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கும் ஆறு பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளுக்கு எதிராக போராடுகிறார். மறைமுகமாக அரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார் ஆசாத். அப்பா விக்ரம் ரத்தோட் மற்றும் மகன் ஆசாத் என இரண்டு கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார் ஷாருக்கான்.

இதில் மகன் ஆசாத் தனிப்படையை உருவாக்கி ஆயுத வியாபாரியான காளியை(விஜய் சேதுபதி) எதிர்த்து போராடுகிறார். காளியைப் பார்த்து அனைவரும் பயந்து கொண்டிருக்கும் நிலையில் தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சில பெண்களை வைத்துக்கொண்டு விஜய் சேதுபதிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் ஆசாத். இந்தப் படையின் பயணம் என்னவானது? காளியை எதற்காக ஷாருக்கான் எதிர்க்க வேண்டும்? கடைசியில் காளியின் கதை என்ன ஆனது? என்பது குறித்த மீதிக் கதை தான் ஜவான் திரைப்படம். இதில் அப்பா மகனாக ஷாருக்கான் இரட்டை வேடங்களில் அழகிய நடிப்பை கொடுத்திருக்கிறார். நர்மதா என்னும் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கிறார் நயன்தாரா.
கொடூர வில்லனாக இரண்டாம் பாதியில் முழுவதையும் தன் வசப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. பாலிவுட் கிங் ஷாருக்கான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நின்று ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். மேலும் எமோஷனல் காட்சிகளிலும் பலரையும் கண்கலங்க வைத்துள்ளார். ரொமான்ஸ், காதல், ஆக்சன், சண்டை, எமோஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்பி ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறார் ஷாருக்கான். தீபிகா படுகோன், சஞ்சய் தத் போன்றோர் சில நிமிடங்களே தோன்றினாலும் தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளனர். பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, லெகர் கான் போன்ற ஷாருக்கான்களின் குரூப்பில் இருந்த பெண்களின் நடிப்பும் அசர வைத்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யோகி பாபுவிற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. ஏதோ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது போல அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமான ரிவெஞ்ச் திரைக்கதையை இந்த படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. மெர்சல், பிகில், கைதி, சர்தார் போன்ற பல படங்களின் கலவையை தான் இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. படம் முழுவதும் லாஜிக் என்று பார்க்க எதுவுமே இல்லாமல் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாகம் அப்படியே மெர்சல் படத்தை காப்பி அடித்தது போல இருக்கிறது. டெக்னீசியன்களின் பங்கு பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் ரூபன் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு போன்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகள் பாராட்டுக்குரியது.
அட்லீ சொல்ல வந்த அரசியல் கருத்துக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியதாக இருந்தது. ஆனால் பல தமிழ் படங்களை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு சலிப்பு தட்டிய கதைதான். இதெல்லாம் ஒருபுறம் இருக்க தனது பின்னணி இசை மூலம் படத்தை ஒரு புறம் தாங்கி நிற்கிறார் அனிருத். படத்தின் நீளத்தை குறைத்து விட்டு லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் படத்தை ஒரு முறை திரையில் சென்று பார்க்கலாம். இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.75/5
Youtube Video Embed Code Credits: Red Chillies Entertainment