நாடுமுழுவதும் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் உள்பட 51 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரண்டு மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் 11, கேரளாவில் 5, பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலத்தில் 4, சிக்கிம் 3, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 2, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, ஒடிசா, புதுச்சேரி, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதி உட்பட 51 தொகுதிகள் இதில் அடங்கும். இதேபோல், பீகார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தலா 1 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
கேரளா மாநில இடைத்தேர்தலில் 3 இடங்களில் இடதுசாரி முன்னணி கூட்டணியும், 1 இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரசும், தமிழ்நாட்டின் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிகளை குவித்துள்ளன.

பஞ்சாபின் 4 தொகுதிகளில் 3ல் காங்கிரசும், ஒரு இடத்தில் மட்டும் அகாலிதளமும் வெற்றிபெறுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் ராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
அசாமில் பாஜக 3 தொகுதிகளிலும், ஏஐயூடிஎஃப் ஒரு இடத்திலும், ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆளும் கட்சிகளான டி ஆர் எஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவை வென்றுள்ளன.
அதேபோல், குஜராத் மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களிலும், ஆளும் பாஜக 1 இடத்திலும், சிக்கிமில் பாஜக 2 இடங்களையும், சிக்கிம் புரட்சிகர முன்னணி ஓர் இடத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளன.
பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் ராஷ்டிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ள. இதே போல நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலிலும் லோக் ஜன் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அருணாசல பிரதேசம் மற்றும் பீகாரில் தலா ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக 2 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் ஒரு இடத்திலும், மேகாலயாவில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக 7, சமாஜ்வாடி கட்சி 3 மற்றும் அப்னா தளம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலை பொருத்த வரை பாஜக-சிவா சேனா கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பலத்தில் இருக்கிறது. சுமார் 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களிலும், சுயேட்சைகள் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். மேலும் மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது இழுபறியாகவே இருக்கிறது. பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும், ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.