கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படங்களை அவரது மகன் சண்முக பாண்டியன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், இன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை அவரது தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. “இன்னும் 14 நாட்கள் அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது, கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக இல்லை, நுரையீரலுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது” என்று அறிக்கை வெளியானது.

இந்த அறிக்கையைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சில நிமிடங்களுக்கு பின்னர் விஜயகாந்த்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விட்டதாகவும் ட்ரக்கியூஸ்டமி என்று கூறப்படும் தொண்டை வழியாக நுரையீரலுக்கு குழாய் செலுத்தி அதன் வழியாக ஆக்சிஜன் செலுத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜய்காந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், “காலையில் வெளியான மருத்துவ அறிக்கை சாதாரண மருத்துவ அறிக்கை தானே தவிர பதட்டப்படும் வகையில் எந்த விஷயமும் அதில் இல்லை. எனவே தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கேப்டன் மிக நலமாக இருக்கிறார். அவரை நான் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறேன் என விளக்கமளித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் நலமாக இருக்கும் புகைப்படங்களை அவரது மகன் சண்முக பாண்டியன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், “கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கேப்டனின் புகைப்படத்தை பார்த்த அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Twitter Original Source From: Vijayakant