காவேரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்பது குறித்து பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விவசாயம் மற்றும் தண்ணீர் பஞ்சம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியை நதிநீர் இணைப்புத் திட்டம் போக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காங்கிரசின் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி – வைகை – குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத்திடம் எழுத்துப் பூா்வாகக் கேட்ட 4 கேள்விகளுக்கு கடந்த சனிக்கிழமை அவா் பதில் அளித்துள்ளாா்.
அதில், காவிரி – வைகை – குண்டாறு நதிநீா் இணைப்பு குறித்தும், இணைப்புக் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளதா, எத்தனை கட்டப்பட்டுள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இணைப்புக் கால்வாய் கட்டப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கான பதிலில், காவிரி – வைகை – குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தின் செயலாக்க அறிக்கை தேசிய நீா் மேம்பாட்டு நிறுவனத்தால் 2004 இல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த திட்டம்தான் மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பொன்னாறு-காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட் டத்தின் இறுதித் திட்டமாகும். இதன் செயலாக்கம் மகாநதி மற்றும் கோதாவரி நதிகளிலிருந்து கொண்டுவரப்பட வேண்டிய நீரைப் பொருத்துத்தான் அமையும் எனவும், இத்திட்டதிற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும், எந்த நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.