இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் பெரும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொருளாதார மந்த நிலையை சரி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்க கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனால் மத்திய அரசிடம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வேறு வழிகளைத் திட்டமிட்டு வருகிறது. 2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு ஈவுத்தொகையாக பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 30 ஆயிரம் கோடியைப் பெற முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் இந்த தொகையானது நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறையான 3.3 சதவீதத்தை சமாளிக்க மத்திய அரசுக்கு கைகொடுக்கும் என்று மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.