இன்று அருள் நிதியின் நடிப்பில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள ஒரு படம் தான் டைரி. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், திரில்லிங்காக இருப்பதாகவும், பல இடங்களில் சஸ்பென்ஸ் இருப்பதால் படத்தை பார்க்கும் ஆர்வம் மிக அதிகமாக இருந்ததாக கூறினர். மேலும் அருள்நிதி நடிப்பையும் அவர்கள் பாராட்டினர். இந்த படத்தை கோப்ரா படத்தில் கதாசிரியராக இருந்த இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கிறார், இது இவருக்கு முதல் படமாகும். இந்த படத்தை பைவ் ஸ்டார்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தது. இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து என்பவர் அருள் நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இந்த படம் குறித்த முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

புதிதாக பயிற்சியை முடிக்கும் போலீஸ் அதிகாரிகள், ஆவண காப்பகத்தில் இருந்து ஒரு கடினமான கேஸ் ஒன்றை எடுத்து பயிற்சி பெறலாம் என்றும், அந்த கேசை விசாரித்து முடிக்கலாம் என்றும் மேலதிகாரி உத்தரவு ஒன்றை போடுகிறார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருக்கும் அருள்நிதி, ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கை கையில் எடுத்து விசாரணையை தொடங்குகிறார். விசாரணையை ஆரம்பித்த பின்பு அவருக்கு மேலும் பல மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவர் அந்த மர்மங்களை எப்படி கண்டுபிடித்தார்? குற்றவாளிகளை கைது செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. ஊட்டியிலிருந்து கோயமுத்தூருக்கு நள்ளிரவில் புறப்படும் ஒரு பேருந்து தான் கதையின் முக்கிய கதைக் களம். பேருந்தில் வைத்து தான் அதிக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஆரம்பம் கொஞ்சம் சுமாராக இருந்தபோதிலும் போகப் போக பல திருப்புங்கள் ஏற்படுகிறது. இந்த திருப்பங்கள் நம்மால் யூகிக்க முடியாத வண்ணம் இருப்பதால், இது படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் அருள் நிதியின் போலீஸ் அதிகாரியாக நடிப்பும் மிக அருமையாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்த்தால் ஒரு நல்ல திரில்லர் படத்தை பார்க்கக்கூடிய அனுபவத்தை பெறலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு நாம் எதிர்பாராத அளவில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனையை நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். இதே போல் படம் முழுவதும் திருப்புமுனைகள் இருந்திருந்தால் படம் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும். மேலும் பிண்ணனி இசை நமக்கு திகிலூட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
மேலும் படத்தின் கதாநாயகியாக வரும் பவித்ராவின் காட்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. மற்றும் ஷாரா போன்றவர்களின் காமெடிகள் பெரிய அளவில் எடுபடாமல் இருக்கின்றன. இரட்டை அர்த்ததில் இவர்கள் செய்யும் சில காமெடிகள் எடுபடவேயில்லை. இரண்டாவது பாகத்தில் கதையின் விறுவிறுப்பை கூட்டியதற்கு பதிலாக ஆரம்பத்திலேயே கூட்டி இருந்தால் படம் இன்னும் வேற லெவலில் வெற்றி பெற்றிருக்கும் என்பது தான் கருத்து. மொத்ததில் டைரி.. சரியாக எழுதப்பட்டிருக்கிறது.