தனது நீண்ட நாள் காதலியை இன்று கரம் பிடித்திருக்கிறார் சர்தார் பட இயக்குனர் பி எஸ் மித்ரன். இந்த வெட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இந்த படம் விஷால் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டிருந்தது. அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகவும் இது இருந்தது. ஆன்லைனில் நடக்கும் நூதன மோசடிகளை தோலுரித்துக் காட்டிய படமாக இந்த படம் இருந்தது.


இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜூன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பெரிய கலைஞர்களுடன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார் பிஎஸ் மித்ரன். அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ என்கிற படத்தை இயக்கினார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அடுத்த ஆண்டே அவருக்கு இன்னொரு படம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த ஹீரோ திரைப்படத்தில் கல்வியில் நடக்கும் ஊழல்களை பற்றி அழகாக காட்டியிருந்தார் பிஎஸ் மித்ரன்.


தனது முதல் படத்தில் வில்லனாக வெற்றியை பெற்று தந்த அர்ஜுனையை இந்த படத்திலும் வில்லனாக நடிக்க வைத்திருந்தார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார். 2022ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிகர் என்கிற படத்திற்கு வசனங்கள் எழுதினார். பின்னர் அதே ஆண்டு கார்த்தியை வைத்து சர்தார் என்கிற படத்தை இயக்கினார் பிஎஸ் மித்ரன்.

கார்த்தியை வைத்து இரட்டை வேடங்களில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசாகி இருந்தது. பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் குடிநீரில் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகிய பலரும் நடித்திருந்தனர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி கொடுத்து இருக்கிறது.

அடுத்தபடியாக அவர் கே ஜி எஃப் கதாநாயகன் யாஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பி எஸ் மித்ரனின் திருமணம் இன்று எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இவர் சினிமா பத்திரிக்கையாளராக இருக்கும் ஆஷா மீரா ஐயப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணத்தில் மேயாத மான் ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் அயலான் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.