அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதில் அவர் பாடகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் தற்போது ரவீந்திரரின் மனைவியாக இருக்கும் மகாலட்சுமி விஷயத்தில் தொடங்கி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுதான் வருகிறார். திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் மகாலட்சுமியை காதலிப்பதாகவும் அவருடன் வாழ விரும்புவதாகவும் பிரச்சினையை கிளப்பியிருந்தார். ஆனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்து அவரை சில காலம் ஜெயிலில் அடைத்தார். அந்தப் பிரச்சனை முடிந்த நிலையில் மீண்டும் அர்னவ் திவ்யா பிரச்சனையில் ஈஸ்வரின் பெயர் அடிபட்டது.

ஈஸ்வர்தான் தங்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன சண்டையைக் கூட பெரிதாக மாற்றுகிறார் என்று அர்னவ் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் மீது பிரபல பாடகர் பி.ஆர். கிருஷ்ணா ஐயர் கொலை மிரட்டல் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஹோட்டலுக்கு சென்று இருந்ததாகவும், அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் சக நடிகர்களுடன் இருந்ததாகவும், என்னை பார்த்தவுடன் என்னிடம் வந்து உடனடியாக இங்கிருந்து கிளம்புமாறு மிரட்டியதாகவும் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம் கேட்டதற்கு உன்னை கொலை செய்வதற்கு பத்து பேரை தயார் செய்து வைத்திருக்கிறேன், உன் நாட்களை எண்ணிக்கொள் என்று தன்னை மிரட்டினார். எனவே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன் அவருக்கும் எனக்கும் எந்த விதமும் முன் விரோதமும் இல்லை.
அவரிடம் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு எதற்காக என்னை மிரட்டினார் என்ற காரணமும் தெரியவில்லை. வயது முதிர்ந்த தனது தாயுடன் வசித்து வருவதால் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கிருஷ்ணா புகார் அளித்திருக்கிறார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா அய்யர் தமிழில் பல படங்களில் பாடியிருக்கிறார். மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்கள் குழுவில் ஒரு நடுவராக இருந்து வருகிறார்.