நடிகர் விஜய். தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவில் இந்த பெயருக்கு இப்பொது அறிமுகம் தேவையில்லை. எதோ ஒரு வகையில் ட்ரெண்டாக வேண்டுமெனில் விஜயை பற்றி பேசினால் போதும், அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து மீடியாகளிலும் எளிதாக ட்ரெண்டாகி விடலாம். தன்னை தானே கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, இன்று தமிழ் சினிமாவின் உச்சாணி கொம்பில் ஏறி, பெரிய நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார்.

கலவையான விமர்சங்கள் வந்தாலும் இவரை திரையில் காண ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்களும் திரையரங்கை நோக்கி படை எடுப்பார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கு விஜய். ஒரு கார் பிரியர். கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி மட்டுமே செலுத்தவேண்டிய நிலையில் 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதமே இதற்கான இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று வழக்கின் தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், நுழைவு வரியை முழுமையாக செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
