கடந்த 2013ஆம் ஆண்டு கற்பழிப்புக்கு எதிராக கடுமையான சட்ட திருத்தங்களை இந்தியா கொண்டு வந்தது. இருப்பினும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நீதியை பெற்று கொடுக்க முடியவில்லை.
எப்போதெல்லாம் இந்தியாவில் கற்பழிப்புகள் நிகழும் போதெல்லாம் நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் கிளம்பும். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அவரது தலைவிதியை சார்ந்தது என்று ஒரு தரப்பினரும், கடுமையான சட்டங்கள் மற்றும் கற்பழிப்பாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வேண்டுமென மற்றோரு சாராரும் பேசுகிறார்கள்.
ஹைதராபாத்தில் 27 வயதான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் முறையிட்டு, நீதி கோரினர். சமாஜ்வாடி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் “கற்பழிப்பு செய்தவர்களை பகிரங்கமாக கொலை செய்ய வேண்டும்” என்றும், திமுக எம்.பி வில்சன் “கற்பழிப்பாளர்கள் சிறையிலிருந்து வெளிவரும் முன்னரே அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்தனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட போது, இந்திய மக்களின் சீற்றத்திற்கு ஏற்ப கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை என மரண தண்டனை வரையிலும் இந்த சட்டம் நீண்டிருக்கிறது.12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனையை மத்திய அரசு 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
சட்டங்கள் கடுமையானதாக இருக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு கற்பழிப்புகளை தடுக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளது? 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எத்தனை கற்பழிப்பு வழக்குகளில் நீதி வழங்குவது மேம்பட்டுள்ளது? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
கற்பழிப்புகள் மற்றும் தண்டனைகள் குறித்த ஆய்வில், “மரண தண்டனைகள் கற்பழிப்புகளை ஒரு போதும் தடுக்காது” என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பிறகு கற்பழிப்புகள் தொடர்பான வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012 வரை, இந்தியா முழுவதும் 25,000க்கும் குறைவான கற்பழிப்பு வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013 இல், இந்த எண்ணிக்கை 33,707 ஆக உயர்ந்தது. பிறகு 2016 இல் 38,947 என உயர்ந்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் கற்பழிப்புகள் தொடர்பான வழக்குகள் ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. டெல்லியில், 2012 ஆம் ஆண்டு 585ஆக இருந்த கற்பழிப்பு வழக்கு 2013ல் 1,441 ஆக உயர்ந்து 2016ல் 1,996 ஆக உயர்ந்தது. பின்னர் 2017 இல் 1,168 ஆகக் குறைந்துள்ளது. (2018ஆம் ஆண்டிற்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை)
இது குறித்து மும்பையை சார்ந்த வழக்கறிஞரும் ஆர்வலருமான ஆட்ரி டி மெல்லோ, “2012ஆம் ஆண்டில் நடந்த கூட்டு பலாத்காரத்திற்கு பிறகாக வழக்குகளை அதிகமாக பதிவு செய்யும் நிலை காவல்துறைக்கு ஏற்பட்டது. அதுவும் பெரும் அவமானம் அடைந்த பிறகே இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அதே சமயத்தில் 2013ஆம் ஆண்டிற்கு பிறகாக குழந்தைகள் பாலியல் தீண்டுதலுக்கு உட்படுவது அதிகரித்துள்ளது” என்றார்.
2014ஆம் ஆண்டிற்கு பிறகு கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. இருப்பினும் 2017ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 87 சதவிகிதத்திலிருந்து 61 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் ஏதும் தெளிவாக இல்லை.
கற்பழிப்புகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை அதிகரித்துள்ள போதும், வழக்குகள் பல நிலுவையில் தேங்கி நிற்கின்றன. இவ்வழக்குகளை கையாளும் அளவிற்கு நீதிமன்றத்திடம் போதுமான அமைப்புகள் இல்லாமல் இருப்பதே இதற்கான காரணமாக இருக்கிறது.
இதற்கிடையில், பாலியல் வழக்குகளில் தண்டனை வழங்கப்படும் விகிதமும் குறைவாகவே காணப்படுகிறது. இவ்விகிதம் ஆண்டிற்கு சுமார் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையிலே உள்ளது.
இது குறித்து மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்ருக் அதென்வாலா கூறுகையில், “பாலியல் வழக்குகளில் நீதி வழங்கும் அளவிற்கு பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் நீதிமன்றங்களில் நிகழவில்லை” என்கிறார்.
மேலும் கூறுகையில், “பாலியல் மற்றும் குழந்தை பாலியல் சீண்டல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அதிக அளவிலான தனி நீதிமன்றங்களை அமைப்பதாக அரசாங்கம் கூறி வருகிறது. 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 664 நீதிமன்றங்கள் இருந்தன. தற்போது அவை 1,023ஆக உயர்த்துவதாக அறிவித்தது.
ஆனால், உண்மையில் எத்தனை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன? நிலுவை வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்கள் எத்தனை நிரப்பட்டு இருக்கின்றன? என்றெல்லாம் கேள்விகள் இருக்கின்றன. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் வழக்குகளும் அதிகரித்துள்ளது. இருப்பினும் மாற்றம் என்ன? வன்கொடுமை செய்தவர்கள் குற்றவியல் சட்டத்திற்குள் தள்ளப்பட்ட பின்னர் என்ன நிகழ்கிறது? என்ன முடிவுகள் கிடைக்கின்றன? என்றார்.
“பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர் குறித்தான தங்கள் பார்வையை நீதிமன்றமோ, காவல்துறையோ மாற்றிக்கொள்ளவில்லை. பழைய சிந்தனையிலே இருக்கும் பட்சத்தில், தீர்ப்பு விகிதத்தில் எந்த விதமான மாற்றத்தையும் நம்மால் காண முடியாது”
மும்பையில் பணிபுரியும் மற்றோரு வழக்கறிஞரான மனிஷா துல்பூலே கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, அவரது மனநிலை குறித்தான உணர் திறன் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள். விசாரணைகள் மற்றும் சோதனைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதைக் கூற பெரும்பாலான இந்திய மாநிலங்களில் நிலையான இயக்க நடைமுறைகள் இன்னும் வகுக்கப்படாமலே உள்ளன. பெரும்பாலும், பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது நீதிமன்ற சாட்சியங்களையோ அச்சுறுத்தும் போது கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை பதிவு செய்வதில் சிக்கலாக அமைகிறது” என்கிறார்.
அதேபோல, டெல்லி வழக்கறிஞர் கருணா நுண்டி கூறுகையில், “பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவது அரசாங்கத்திற்கு எளிதான காரியம். ஆனால் இது மட்டும் போதாது. சமுதாயத்தில் உள்ள நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்கிறார்.
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு