
பள்ளிக் கல்வியின் தற்போது உள்ள தர மதிப்பீடு, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக அதில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கைக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணியில் மனிதவள மேம்பாட்டுத் துறை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ”பள்ளிக் கல்வியின் தற்போதைய தர மதிப்பீட்டில், மோசமான பாதிப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக 2022-ம் ஆண்டுக்குள் என்சிஇஆர்டி வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்.
அதன்படி, பள்ளிக் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்தேர்வுகள் எளிமையாக்கப்படும். தேசிய பாடத்திட்ட அமைப்பு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது. புதிய பாடத்திட்ட அமைப்போடு ஒருங்கிணைக்கப்படும்.
தற்போதைய மதிப்பீட்டு முறையின் பழக்க வழக்கங்களை களைய, பொதுத் தேர்வுகளில் சில மாற்றங்கள் செய்யப்படும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களின் அடிப்படையில் அவற்றைத் தெரிவு செய்து தேர்வுகளை எழுதலாம். இதுதொடர்பாக என்சிஇஆர்டி வழிமுறைகளை உருவாக்கி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் புதிய கல்விக் கொள்கை இறுதி அறிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் அளிக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை, 2014 பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதான தேர்தல் அறிக்கை அம்சங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.