ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் ஜவான் திரைப்படத்தின் ஐந்தாவது நாள் வசூலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தை தயாரித்த ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஐந்தாவது நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜவான். 5 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.129 கோடியை வசூலித்து இருந்ததாக அறிவித்திருந்தது.

இரண்டாவது நாளில் ரூ.240 கோடியையும் மூன்றாவது நாளில் ரூ.384.69 கோடியையும் வசூலித்து இருந்தது இந்த திரைப்படம். தொடர்ந்து வசூலை குவித்து வரும் இந்த படத்தின் நான்கு நாள் முடிவில் ரூ.520.79 கோடி வசூலை வாரி குவித்து இருந்தது. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 30 நாள் கழித்து ரூ.600 கோடி வசூலை குவித்து இருந்த நிலையில் இந்த திரைப்படம் நான்காவது நாளிலேயே ரூ.520 கோடியை வசூலித்திருந்தது. இந்த நிலையில் ஐந்தாவது நாள் முடிவில் ரூ.600 கோடியை தாண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ரூ.574.89 கோடியை வசூலித்து சாதனை செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வரும் ஜவான் திரைப்படம் அடுத்து இரண்டு நாட்களில் ரூ.600 கோடியை தாண்டி ஜெயிலரின் வாழ்நாள் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தி திரைப்படங்கள் பலவும் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் தமிழ் இயக்குனராக அட்லீயின் ஜவான் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!