தி பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இருந்து ஜானி டெப்பை நீக்கியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம் டிஸ்னி நிறுவனம் எழுதியுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜானி டெப் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. கடற் கொள்ளையர்களை மையமாக கொண்டு காமெடி கலந்த ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டது தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன். இந்த படத்தில் ஜாக் ஸ்பேரோவாக நடித்தவர் ஜானி டெப். இவருடைய உடல் மொழிக்கு என்றே உலகில் பல ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த படம் 5 பாகங்களாக வெளிவந்துள்ளது. இந்த 5 பாகங்களிலுமே ஜானி டெப் தான் ஹீரோ. இந்த நிலையில் 2018ம் ஆண்டு ஜானி டெப்பின் மனைவி ஆம்பர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் ஜானி டெப் பற்றி மிக தவறாக எழுதியிருந்தார். இயற்கைக்கு மாறா தன்னிடம் உறவு கொண்டதாக எழுதியிருந்தார். இதனால் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் 6ம் பாகத்தில் இருந்தும், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்ற படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜானி டெப்.

இதனால் கடுப்பான ஜானி டெப் இந்த கட்டுரையால் தான் மிகவும் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டதாக 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு அவரது மனைவி ஆம்பரும் 100 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். இதனை விசாரித்த 7 பேர் கொண்ட அமர்வு, ஆம்பரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறி ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 10 மில்லியன் டாலர் ஜானிக்கு நஷ்ட ஈடாகவும், 5 மில்லியன் டாலர் கோர்ட்டுக்கும் என்று தீர்பளித்தது. இந்த செய்தி வெளியான பின்பு, படத்தில் இருந்து நீக்கியதற்காக டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் 301 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2500 கோடி) சம்பளமாக வழங்க டிஸ்னி முன் வந்துள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இது குறித்து ஜானியின் பதில் என்ன என்பதை அறிய முடியவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜானி டெப் மற்றும் அவரது மனைவிக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் டிஸ்னியின் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று ஜானி கூறியிருந்தார். அதனாலேயே 301 மில்லியன் டாலர்கள் சம்பளம் தருவதாகவும், படத்தில் இருந்து நீக்கியதற்கு மன்னிப்பு கேட்டும் டிஸ்னி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதெல்லாம் அடிப்படை ஆதராமற்ற செய்திகள் என்று ஜானி டெப் தரப்பு மறுத்துள்ளது.