தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் கலா மாஸ்டர் தனது கணவருடன் இணைந்து திருமண நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அவருக்கு பலரும் திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு முன்னணி நடன கலைஞராக இருந்து வருகிறார் கலா மாஸ்டர்.
1982ம் ஆண்டு தனது 12வது வயதில் நடன உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன், ரேவதி நடிப்பில் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ படத்தில் இவருக்கு நடன உதவியாளராக ஒரு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கே பாலச்சந்தரால் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு நடன இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, இத்தாலி, ஜப்பானிய மொழிகளென சுமார் 4,000 மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2000ம் ஆண்டு மலையாள திரைப்படமான ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ என்கிற படத்தில் இடம்பெற்ற தனது நாட்டுப்புற நடனத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
சென்னையில் ‘கலாலயா’ என்கிற நடனக் கல்லூரியை தொடங்கினார். சந்திரமுகி திரைப்படத்தில் இவரது நடனத்திற்காக மாநில விருதும் வழங்கப்பட்டது.
கலா தனது பெற்றோர்களுக்கு ஆறாவதாக பிறந்த மகள் ஆவார். இவரது தங்கை பிருந்தாவும் ஒரு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கலாவிற்கு சினேகாவின் அண்ணன் கோவிந்தராஜனுடன் 1997ம் ஆண்டு திருமணமானது. இரண்டு ஆண்டுகளில் இந்த தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.
பின்னர் மகேஷ் என்பவருடன் 2004ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு வித்யூத் என்கிற மகன் இருக்கிறார். இந்த நிலையில் தனது 19வது திருமண நாளை குடும்பத்தினருடன் இணைந்து கலா கொண்டாடியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.