காதலர் தினமான இன்று தனது காதலியை சமூக வலைத்தளங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம். மேலும் இனிமேல் நான் சிங்கள் இல்லை என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். பிரபல மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஜெயராம். இவர் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருக்கிறார். 1988 ஆம் ஆண்டு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தமிழில் பொன்னியின் செல்வன். இந்த கதையில் ஆழ்வார் கடியால் நம்பி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

இவரது மகன் காளிதாசும் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகரில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்கிற படத்தின் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமானார் காளிதாஸ். அதன் பின்னர் இவர் ஆந்தாலஜி முறையில் எடுக்கப்பட்ட பாவக்கதைகள் படத்தில், தங்கம் என்கிற கதையில் சத்தார் கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தார். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் பெருகியது. தனது அசாத்தியமான நடிப்பால் பலரை கவர்ந்திருந்தார் காளிதாஸ்.
பின்னர் இவர் விக்ரம் என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்திலும் வித்தியாசமான கதைக்களத்துடன் நடிப்பில் அசத்தியிருந்தார். தற்போது மலையாளத்தில் ரஜினி என்கிற படத்திலும், தமிழில் பக்கத்தில கொஞ்சம் காதல் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார் காளிதாஸ். இது மட்டுமில்லாமல் பிண்ணனி பேசுபவராகவும், குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தந்தையை போலவே மிமிக்ரி செய்வதிலும் வல்லவராக இருக்கிறார். முதன்முறையாக அவர் தல அஜீத் போலவும், தளபதி விஜய் போலவும் ஒரு மேடையில் பேசி அசத்தினார். அதன் பின்னர் இவர் மீது மீடியா வெளிச்சம் பட்டது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு துபாய் சென்ற போது தாரணி என்கிற மாடல் அழகியை கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போதே இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறி வந்தனர்.
ஆனால் அப்போது காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.இந்த நிலையில் காதலர் தினமான இன்று தாரணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “இனி நான் சிங்கிள்” இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலமாக முதன்முறையாக தனது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.
இந்த காதல் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.