
இன்று(நவ.18) தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், சிவசேனா கட்சி எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மஹாராஷ்டிர மாநில சட்டசபையில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பின், பா.ஜ., உடனான கூட்டணியை, சிவசேனா முறித்து கொண்ட நிலையில், அக்கட்சியின் சார்பில், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அரவிந்த் சாவந்த், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அக்கட்சியின் எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், அந்தக் கட்சி பங்கேற்கவில்லை. மேலும், காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சி வரிசையில், சிவசேனாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.