தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவர் காஷ்மீரில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் மற்றும் நண்பர்களுடன் அவர் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

2016 ஆம் ஆண்டு வெளியான அவியல் என்கிற ஆந்தாலஜி படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் வங்கி வேலையை உதறித் தள்ளிவிட்டு தனது நீண்ட நாள் கனவான இயக்குனராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் 2017 ஆம் ஆண்டு மாநகரம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக மக்களின் மனதில் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ்.
அதனைத் தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அடுத்ததாக தளபதி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலஹாசன் வைத்து விக்ரம் திரைப்படத்தை எடுத்தார். அந்த திரைப்படம் சுமார் 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்து 100 நாட்களைக் கடந்து வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமலுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததால் ஏகத்துக்கும் குஷியில் இருந்தார் கமலஹாசன். லோகேஷ் கனகராஜுக்கு கார் கூட பரிசாக அளித்து இருந்தார். அந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை குவித்து வந்த லோகேஷ் தற்போது தளபதி விஜய் வைத்து லியோ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
தளபதியின் 67வது படமாக இருக்கும் இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகை திரிஷா, பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் டைட்டிலை சில நாட்களுக்கு முன்பாக ஒரு குட்டி டீசருடன் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் ஒரு சாக்லேட் ஃபேக்டரில் சாக்லேட்டையும் கத்தியையும் ஒரு சேர செய்து கொண்டிருக்கும் தளபதி விஜய் கத்தியை சாக்லேட் கலவையில் முக்கி எடுத்து அதில் இருக்கும் சாக்லேட்டை சுவைத்து விட்டு பிளடி ஸ்வீட் என்று சொல்லுவார். அந்த டீசர் வைரலாக தொடங்கியது. மேலும் பிளடி ஸ்வீட் என்கிற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கியது.
டீசர் வெளியான கையோடு படக்குழுவினர் கிளம்பி காஷ்மீருக்கு சென்றனர். கடும் குளிரையும் பொறுப்பெடுத்தாமல் அங்கிருந்து சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லோகேஷுக்கு இன்று 37வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தளபதியுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மிகவும் நன்றி அண்ணா என்று பகிர்ந்து இருக்கிறார். மேலும் இரவு நேரத்தில் படக்குழுவினர் லோகேஷுக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர்.
அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் நடிகை திரிஷா லோகேஷ் என அனைவரும் பங்கெடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் லோகேஷுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், மேலும் லியோ படத்தில் தரமான சம்பவம் செய்ய சொல்லியும் அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.