குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் முன்பு தீக்குளித்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய பேரணி போலீசாரின் தடியடி முடிந்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடுத்தர வயது மிக்க இளைஞர் ஒருவர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இளைஞரின் உடலில் பற்றிய தீயை அணைக்க முற்பட்டனர். தற்போது அந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலில் 90 சதவீத தீக்காயங்கள் பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறையின் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கார்த்திக் மகெர் எனவும் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தீக்குளித்தவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது சகோதரர் கூறியதாகவும், மேலும் இந்த தீக்குளிப்பு சம்பவத்திற்கும், டெல்லியில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கும் இந்தவிதமான தொடர்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.