1995ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் மனிஷா கொய்ராலா. இந்த படத்தில் வரும் உயிரே உயிரே பாடல் மூலம் பலரின் உள்ளங்களை கவர்ந்தவர். பின்னர் இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்து இருந்தார். முதல்வன் படத்தில் வரும் குறுக்கு சிறுத்தவளே, உப்புக்கருவாடு போன்ற பாடல்கள் இன்றளவும் மனிஷா கொய்ராலாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்றுதான் கூற வேண்டும். திரைத்துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

2012ம் ஆண்டு கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு வருடகாலமாக சிகிச்சை எடுத்து வந்தார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போட்டு வருகிறார் மனிஷா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி செய்யும் போது கதிர்வீச்சு தாங்காமல் தலை முடிகள் எல்லாமே கொட்டிவிடும். அதி போலத்தான் மனிஷாவுக்கும் தலையில் முடிகள் எல்லாம் கொட்டிவிட்டது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து புற்றுநோயின் சிகிச்சை மிக கடினமானது. இந்த கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும்,
பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு அடிபணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும், மேலும் நம்பிக்கையுடன் நிறைந்த அனைத்து கதைகளையும் சொல்ல வேண்டும், மீண்டும் சொல்ல வேண்டும். நமக்கும் உலகத்துக்கும் கருணை காட்டுவோம். அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் கேன்சரால் முடிகளை இழந்த அவர் தனது தலைக்கு மொட்டை அடித்து உள்ளார். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.