திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மீது முஸ்லீம் அமைப்புகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் இந்தியாவின் மிகப் பணக்கார நடிகராகவும் அறியப்படுகிறார். தற்போது ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற பல முண்ணனி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கி இருந்த திரைப்படம் தான் ஜவான். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பல படங்களை கலவை செய்து இந்தப் படத்தை எடுத்திருந்ததாக ரசிகர்கள் கருத்துக்களை கூறினர்.

இந்த நிலையில் படம் வெளியாக சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா ஷாருக்கான் மற்றும் படக்குழுவினர் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்து இருந்தார். அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானாவும் உடன் சென்று இருந்தார். இந்த நிலையில் ஷாருக்கான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததை முஸ்லீம் அமைப்புகள் சில கடுமையாக எதிர்த்துள்ளனர். சன்னி முஸ்லிம் அமைப்பின் அமைப்பாளார் ராஸா அகாடமி தலைவர் சையது நூரி ஷாருக்கானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இஸ்லாம் மதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ் முன்பு தான் தலை வணங்க வேண்டும்”
முஸ்லிம்கள் சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில நடிகர்கள் இந்து கடவுள்களை வழிபட்டு ஆரத்தி எடுக்கின்றனர். ஆனால் இதெல்லாம் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஷாருக்கான் திருப்பதி சென்று வந்ததால் இஸ்லாமிய வாலிபர்கள் மத்தியில் அது பெரும் பாதிப்பாக இருக்காது, இசுலாமிய வாலிபர்கள் தங்கள் மத நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். இவரை தொடர்ந்து வழக்கறிஞராக இருக்கும் யூசுப் முஸ்ஸாலா இஸ்லாமிய சட்டத்தை ஷாருக்கான் மீறி இருக்கிறார். சிலை வழிபாடு இஸ்லாத்துக்கு எதிரானது. திருப்பதியில் வழிபட்டதன் மூலம் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறி இருக்கிறார். அவரவர் தங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் அவரை விமர்சிக்க போவதில்லை என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.