யாரடி நீ மோகினி என்கிற சீரியல் மூலமாக பிரபலமான நட்சத்திரா தற்போது முதல் முறையாக தனது குழந்தைக்கு விழா ஒன்றை நடத்தி இருக்கிறார். அதாவது பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நட்சத்திரா. இவருக்கும் சினிமா துறையைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

நண்பர்கள் உறவினர்கள் என யாரையும் அழைக்காமல் திருப்பதியில் வைத்து எளிய முறையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
திருமணம் முடிந்த பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி என்கிற சீரியலில் நடித்து வந்தார் நட்சத்திரா. திடீரென கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பல சீரியல்களும் முடிக்கப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் எந்த ப்ராஜெக்ட்டிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த நட்சத்திரா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார். மேலும் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தையும் பிறந்திருந்தது. சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரா குழந்தையின் கைகளைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். “பல மாதங்களாக உங்கள் வயிற்றில் உதைத்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை நீங்கள் இறுதியாக காணும் பொழுது” என்று சொல்லி அந்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
பலரும் நட்சத்திராவிற்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில், தற்போது புது புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து மிகப்பெரிய மரத்தொட்டில் ஒன்று செய்து அதில் முதல் முறையாக குழந்தையை போட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
நட்சத்திரா கேரளாவை சேர்ந்தவர் என்பதால், கேரள முறைப்படி சில சடங்குகளை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுபோல தற்போது குழந்தையை தொட்டிலில் விடும் நிகழ்ச்சியை அவர் நடத்தி இருக்கிறார். மேலும்,”நாங்கள் அதை கனவு கண்டோம் தற்போது அது நனவாகி இருக்கிறது” என்று சொல்லி அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.