நடப்பு பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிக்கும் எனவும், அதே வேளையில் பழங்களின் உற்பத்தி சரியுமெனவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பருவத்தில் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழை காரணமாக மஹாராஷ்டிரவில் வெங்காய உற்பத்தி சரிந்தது.
இதனால் வெங்காய விலை பன்மடங்கு உயர்ந்து உணவு பணவீக்கத்தை அதிகரித்துவிட்டது. தற்போது இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு 2019-20-ஆம் பயிா் பருவத்தில் நாடு தழுவிய அளவில் வெங்காயத்தின் மொத்த உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பயிா் பருவ உற்பத்தியான 2.28 கோடி டன்னைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
மேலும், வெங்காயம் பயிரிடும் நிலபரப்பும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் உற்பத்தி நடப்பு பருவத்தில் 5.01 கோடி டன்னிலிருந்து 5.19 கோடி டன்னாகவும், தக்காளி விளைச்சல் 1.9 கோடி டன்னிலிருந்து 1.93 கோடி டன்னாகவும் அதிகரிக்கும்.
அதேவேளையில் பீன்ஸ், கோவக்காய், பூசணி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தி சரிவடையும் எனவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.