விளையாட்டில் ஒருபோதும் சூதாட்டத்திற்கு இடமளிக்க கூடாது என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “கிரிக்கெட்டை விரும்புபவர்கள் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது. அவ்வாறான முடிவினை எடுத்தால் நீங்கள் இந்த விளையாட்டை விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.
பணத்துக்காகத் தான் நீங்கள் விளையாடுகிறீர்கள் எனலாம். சூதாட்டம் தொடர்பாக யாராவது அணுகினால் அந்த விடயம் குறித்து உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் புகார் செய்யாமல் தவிர்த்தால் அந்த சூதாட்ட தரகர் மற்றொரு வீரரை தொடர்பு கொள்ள வழிவகுத்தது போலாகி விடும்” என்றார்.
மேலும் சேவாக் பேசுகையில், ” டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கக்கூடாது. அது டெஸ்ட் போட்டியின் ஆத்தமாவில் கை வைத்தது போலாகிவிடும். ஆனால் புதுமையான விடயங்களை நாம் முயற்சிக்கலாம். அந்த வகையில், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறிய 533 டெஸ்ட் போட்டிகளில் 83 போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 223 டெஸ்டில் 31 போட்டிகள் மட்டுமே டிரா ஆனது. டிரா சதவீதம் குறைந்து கொண்டு தான் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.