கடந்த சில நாட்களாக தினேஷ் மற்றும் ரட்சிதாவின் திருமண வாழ்க்கை குறித்து கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அது குறித்து ரட்சிதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டவர் ரட்சிதா. இவரது முன்னாள் கணவர் தினேஷ் தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக இருந்து வருகிறார். இவருக்கும் மற்றொரு போட்டியாளரான விசித்ராவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. தினேஷ் தொடர்ந்து விசித்ரா பெயரை பயன்படுத்துவதும், அவரைப்பற்றி சக போட்டியாளர்களிடம் குறை பேசிக் கொண்டிருப்பதும் விசித்ராவிற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது. யார் எது செய்தாலும் அதற்கு விசித்ரா பெயரையே அவர் பயன்படுத்தி வருகிறார்.

மேலும் பலரையும் தினேஷ் தூண்டிவிட்டு தனக்கு எதிராக வேலை செய்வதாக விசித்ரா நினைக்கிறார். ஒருமுறை ரவீனா விசித்ராவை பாத்திரம் துலக்குவதற்கு அழைத்த போது தினேஷ்தான் ரவீனாவை தூண்டிவிட்டு இவ்வாறெல்லாம் செய்கிறார் என நினைத்துக் கொண்டு விசித்ரா கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். அவர் கேமராவில் நின்று கொண்டு தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசத் தொடங்குகிறார். “இவரெல்லாம் மனிதரே கிடையாது, இப்படி இருந்தால் இவருடன் யார் குடும்பம் நடத்துவார்கள்?” என்று கூறிவிட்டு பிரிந்து சென்ற ரட்சிதாவுக்கு அறிவுரையும் கூறுகிறார். “யம்மா நீ திரும்பி ஏதும் வந்து விடாதே, இவருடன்லாம் வாழ முடியாது” என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய எபிசோடில் கமலும் இதை கடுமையாக கண்டித்து இருந்தார்.

விசித்ராவின் இந்த பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர், ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ரட்சிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “நான் வாழ்க்கையில் மிகப் பெரிய பாடம் ஒன்றை கற்று கொண்டேன். நீங்கள் தனியாக இருந்தால் கூட சரியானதற்காக எப்பொழுதுமே நீங்கள் உறுதியாக நில்லுங்கள். ஆமாம் உண்மை எப்போதும் கசக்கும். அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகி விடாது. எல்லோரும் என் வாழ்க்கை குறித்து தீர்மானம் செய்ய முடியும். ஆனால் யாரும் என்னுடைய வாழ்க்கை வந்து வாழ முடியாது”.

“இது என்னுடைய போராட்டம் எனவே என்னை தனியாக போராட விடுங்கள், எல்லோரும் உங்கள் வேலையை பாருங்கள். எங்களை எங்கள் வேலையை பார்க்க விடுங்கள். ஹாப்பி நியூ இயர் அன்பே சிவம்” என்று பகிர்ந்து இருக்கிறார். மேலும் அதனுடன் “இதோடு நிப்பாட்டுங்க, அடுத்தவர்கள் வாழ்க்கையில் தலையிடுவதை நிறுத்துங்கள், தனியான போராட்டம், நாங்கள் எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறோம், நேர்மையான பெண், என்கிற ஹாஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தி அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். யாரை இவ்வாறு குறிப்பிட்டு சொல்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.