பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரட்சிதா மகாலட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவு ஒன்று தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதில் அவர், “இறக்க வேண்டிய நேரம் வரும் போது இறந்து விடுவேன்” என்று அவர் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது./விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற சீரியலின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். ரட்சிதா பிக்பாஸில் கலந்து கொண்ட பின்பு தான் அவர்கள் பிரிந்து வாழ்வது பலருக்கும் தெரிய வந்தது.

தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக தினேஷ் கலந்து கொண்டிருக்கிறார். இவர் ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6ல் இருந்த போது பலமுறை உள்ளே செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த சீசனில் இவர் பேசும் பொழுது, ஒரு வேளை இந்த டைட்டிலை நான் ஜெயித்தால் அதை ரட்சிதாவிற்காக சமர்ப்பிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் உள்ளே சென்று வருகின்றனர். அந்த வகையில் தினேஷின் பெற்றோர்கள் நேற்றைய தினம் உள்ளே சென்று விட்டு வந்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “ரட்சிதா மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். நாங்கள் அவருக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அவர் இவ்வாறு தவறான முடிவை எடுத்து விடுகிறார். இனி தினேஷுக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களின் வாழ்க்கை முடிந்துவிட்ட கதை, எனவே இதுகுறித்து இனி பேசுவது பிரயோஜனம் இல்லை” என்ற ரீதியில் அவர்கள் பேட்டி அளித்தனர். மேலும் ரட்சிதா ஒரு வேளை விவாகரத்து கோரினால் விவாகரத்து கொடுக்கவும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர். இந்த நிலையில் இன்று ரட்சிதா மஹாலக்ஷ்மி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் கடற்கரையில் நின்று கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்த அவர் இறப்பு பற்றி போட்டுள்ள கேப்ஷன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “நான் இத்துடன் முடித்து விட்டேன். எனக்கு நேரம் வரும் பொழுது நான் கண்டிப்பாக இறந்து விடுவேன், அதுவரை நான் எப்படி விரும்புகிறேனோ அது போலவே என்னுடைய வாழ்க்கையை வாழ விடுங்கள்” என்று சொல்லி அந்த பதிவை போட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் ரட்சிதாவிற்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.