
‘சாமான்ய மக்களை பாதிக்கும் வகையில் ’ ரயில் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி சாதாரண, எக்ஸ்பிரஸ், குளிர்சாதன ரயில்களில், அவற்றின் வகுப்புகளின் அடிப்படையில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 காசு லிருந்து 4 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்று கியாஸ் சிலிண்டர் விலையும் சிலிண்டருக்கு ரூ.19 உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த உயர்வுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘இந்த விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். இது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றார். சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்ட நியாயமான புத்தாண்டு பரிசா இது?’ என கேள்வி எழுப்பினார். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.