
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், சீர்காழி ஆகிய இடங்களிலும், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரிலும் தலா 1 செ.மீ. மழை பெய்திருந்தது. இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.