Categories: சமூகம்

18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வெளியிட்டது
18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!! 1

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை கொட்டியது. தொடர் மழையால் ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

கோவையில் நள்ளிரவில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மேலும், மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். தளவானூர் கிராமத்தில் அஞ்சு லட்சம், ஸ்ரீப்ரியா ஆகிய இருவர் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கிராம மக்கள், அவர்கள் இருவரையும் விழுப்புரம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், 23 வயதான ஸ்ரீப்ரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, தென்மேற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே அரபிக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்