ராக்கெட்டரி நம்பி விளைவு படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் மாதவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 2000 ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இவர் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார். 80 வயதான நம்பி நாராயணன் இஸ்ரோவில் பணிபுரிந்த போது இந்தியாவின் திட்டங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக பழி சுமத்தப்பட்டு அவர் இஸ்ரோவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தன் மீது உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை தனி ஒருவராக போராடி வழக்கில் வெற்றி பெற்று நிரூபித்து காட்டியவர் நம்பி நாராயணன்.

அவரின் வாழ்க்கையை படமாக்க எடுக்க வேண்டும் என்று மாதவன் முடிவு செய்து, அந்த படத்தை அவரே தயாரித்து நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார். இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. 60 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இதுவரை 15 கோடி ரூபாய் வசூல் மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் படம் மிக நன்றாக இருப்பதாக படம் பார்த்த அனைவரும் விமர்சனங்களை கூறி வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இந்த படத்தைப் பார்த்து இளைஞர்கள் பலரும் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்று படம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மாதவன் மற்றும் நம்பினாராயணன் ஆகிய இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். இருவரையும் வீட்டிற்கு அழைத்த சூப்பர் ஸ்டார் அவர்களை மனமார பாராட்டினார். நடிகர் மாதவனுக்கு சால்வை அணிவித்து ரஜினிகாந்த் பாராட்டினார். அதனால் நெகிழ்ந்து போன மாதவன் ரொம்ப நன்றி சார்..ரொம்ப நன்றி.. என்று அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். இந்த சந்திப்பின்போது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் உடன் இருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து, அரும்பாடுபட்ட பத்மபூஷன் நம்பி நாராயணன் வரலாறை தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குனராக தன் முதல் படத்திலேயே மாதவன் தன்னை நிரூபித்திருக்கிறார் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.