Categories: அரசியல்

பொது தேர்வு ரத்து! ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்க தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொது தேர்வு ரத்து! ராமதாஸ் வரவேற்பு 1

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார சூழலில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது நல்லதல்ல…. அது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்; குலக்கல்வியை ஊக்குவிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதனால் தான் தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். அதுமட்டுமின்றி, இந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பபா.ம.க. சார்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தேன்.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கடந்த 27-ஆம் தேதி காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுபற்றி அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதையேற்று பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனாலும், அதை ஏற்க மறுத்துவிட்ட நான், பொதுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதையேற்று, அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இத்தகைய சூழலில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் கைவிடப் படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்