சின்னத்திரை உலகில் காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழின் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் தனது 44வது பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார்.

அவரின் பிறந்தநாளுக்கு நக்கீரன் கோபால் போன்ற பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன் பின்னர் ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கெடுத்திருக்கிறார்.
தனது மிமிக்ரி திறமையால் சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமலஹாசன், நடிகர் கார்த்திக் போன்றவர்களின் குரலில் பேசி மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.
சின்னத்திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே 1999ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ போன்ற படங்களிலும் குழு நடிகராக நடித்திருக்கிறார்.
இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்த ஒரு படம் என்று சொன்னால் அது ‘யாருடா மகேஷ்’ என்கிற படம் தான். இந்த படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகராக மாறிப்போனார் ரோபோ சங்கர்.
அதன் பின்னர் ‘வாயை மூடி பேசவும்’, ‘கப்பல்’, ‘மாரி’, ‘ஸ்ட்ராபெரி’, ‘ஆறாது சினம்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘மாரி பாகம் 2’, ‘இரும்புத்திரை’, போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக இவர் ‘தமிழரசன்’, ‘பார்ட்னர்’, ‘ஆர் யூ ஓகே பேபி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து ‘சிங்கப்பூர் சலூன்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ‘லயன் கிங்’ படத்தில் பும்பாவிற்கு பின்னணி பேசி டப்பிங் கலைஞராகவும் மாறி இருக்கிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப் சீரிஸ், மிமிக்ரி கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரோபோ சங்கர்.
மேலும் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருக்கிறார். இவருக்கு பிரியங்கா சங்கர் என்கிற மனைவியும், இந்திரஜா என்கிற மகளும் இருக்கின்றனர். இந்திரஜாவும் ‘பிகில்’, ‘விருமன்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வயர்’ நிகழ்ச்சியிலும் பங்கெடுத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக அக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் ரீல்ஸ் செய்வது Vlog செய்வது என்று பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு 44வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பலரும் ரோபோ சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.