கயல் சீரியலில் இருந்து தற்போது சஞ்சீவ் விலகி இருப்பதாக வரும் செய்தி தீயாக பரவி கொண்டிருக்கிறது. இது குறித்து சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்தான் கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடரில் ஒன்றாகவும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு பல இல்லத்தரசிகள் ரசிகைகளாக இருக்கின்றனர். குறிப்பாக இந்த தொடரின் கதாநாயகியாக இருக்கும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் சைத்ராவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தனது குடும்பத்தில் தனி ஒரு பெண்ணாக இருந்து உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வரும் கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்து வருகிறார். மருத்துவமனையில் செவிலியராக கயல் வேலை பார்த்து வருகிறார். கயல் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியும், கயலை காதலிக்கும் எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவை சுற்றியும் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கயல் நாடகத்தில் கயல் தம்பியாக நடித்து வந்த அவினாஷ் சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக ஹரி என்பவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். தற்போது ஹரியும் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
தொடர்ந்து விலகல்கள் நடந்து வரும் நிலையில் தற்போது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவும் விலக இருப்பதாக கடந்த சில தினங்களாகவே இந்த செய்தி உலா வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சஞ்சீவ் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு கீழே பலரும் சீரியலை விட்டு செல்ல வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என்று தான் தெரிகிறது. சஞ்சீவ் நாடகத்தை விட்டு வெளியேறுகிறார் என்ற புகைப்படத்தை காமெடியாக சஞ்சீவ் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதன் உண்மை குறித்து சஞ்சீவ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.