குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எலிமினேஷனில் நடந்த சர்ச்சை குறித்து தற்போது சிவாங்கி முதன் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 10 போட்டியாளர்களும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பங்கு பெற்று வருகின்றனர். இன்னும் ஒன்று அல்லது இரண்டு எலிமினேஷன் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்று, வைல்ட் கார்டு சுற்று மற்றும் இறுதி சுற்று ஆகியவை நடக்க இருக்கிறது. வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே ஆண் போட்டியாளர்கள் ஆவர். கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பன், விஜே விஷால் என தொடர்ந்து நான்கு ஆண் போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி அதிரடி காட்டி இருந்தனர். இது அப்பொழுது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

கிஷோர் வெளியேற்றப்பட்ட போது சிவாங்கியும் கிஷோரும் இறுதி கட்டத்தில் இருந்தனர். சிவாங்கி மூன்று சீசன்களாக கோமாளியாக வந்தவர் என்பதாலும், விஜய் டிவியின் தயாரிப்பு என்பதாலும் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் கிஷோரை வெளியேற்றி இருந்ததாக அப்பொழுதே ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் விஜே விஷால் மற்றும் சிவாங்கி இருவரும் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். இதில் இரண்டு முறை செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய விஜே விஷால் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஷெரின், ஸ்ருஸ்டி, சிவாங்கி போன்றவர்கள் வேண்டுமென்று காப்பாற்றப்படுவதாகவும், கண்டன்டுக்காக நன்றாக சமைக்காதவர்களை கூட உள்ளே வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சிவாங்கி இந்த சீசன் துவங்கியது முதல் நாம் எப்படி சமைக்கிறேன் என்கிற ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் அப்படித்தான். எங்களின் சிறப்பானவற்றை வெளியில் கொண்டு வருவதற்காக நிறைய தியாகங்கள் செய்து வருகிறோம். நாங்கள் மட்டுமல்ல கோமாளிகளும் அவர்களது கெட்டப்புக்காக நிறைய உழைக்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளது உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது சுலபம். நல்ல நாளாக இருந்து, நாம் முயற்சிக்கும் கடின உழைப்பு பலன் அளித்தால் நான் செய்யும் உணவு நன்றாக வரும். அப்படி இல்லை என்றால் அது எனக்கான நாளில்லை. நான் புதிதாக கற்றுக் கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே இங்கு வந்ததாக சிவாங்கி பதிவிட்டு இருக்கிறார். தற்போது அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.