தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் பேரணி சென்னையில் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் பலத்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிலிருந்து, இந்தியா முழுக்க குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணி போலீசாரின் தடியடியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியா முழுக்க போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இச்சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை தவிர தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதாக கூறி திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “இன்று நடைபெற்ற கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வருகிற 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் மிகப்பெரிய பேரணி நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும், “குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான சிக்கல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தொடர்பு கொண்டு பேசினார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள 11 கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்ளும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.