கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி உலகம் எங்கிலும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து கொண்டிருக்கின்ற ஒரு படம் தான் தி லெஜன்ட். பத்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்த போதிலும், 10 நாட்களில் கணிசமான வசூலை குவித்துள்ளது என்றே கூறலாம். ஒரு அறிமுக நடிகரின் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களில் இத்தனை கோடி வசூலை பெற்றிருக்கிறது என்றால், அது இதுவே முதன்முறை. லெஜெண்ட் சரவணனை பொறுத்தவரை தனது துணிக்கடை விளம்பரங்களில் நடித்தார், அப்பொது அவர் உருவக்கேலி செய்யப்படதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் இணைந்து நடித்ததால் பலரும் அவரை கலாய்த்து வந்தனர். உருவத்தை வைத்து யாரையும் கேலி செய்யக் கூடாது என்று சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணாசிக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்தது.

தி லெஜன்ட் என்று தனது கடை பெயரிலேயே ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக அவர் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி தனது படத்தை தானே தயாரித்தார். தனது கடை விளம்பரங்களில் விளம்பரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்களை வைத்து இந்த படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தோலா கதாநாயகியாக நடித்தார். இவருக்கு 20 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. படத்தில் சின்னக் கலைவாணர் விவேக், நாசர், யோகி பாபு, பிரபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படம் வெளியான இரண்டு நாட்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் நாள் போகப் போக பலரும் அண்ணாச்சி படத்தை பார்க்க குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்றனர். இதை பார்த்த அண்ணாச்சி ஆறு முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் தன்னை பார்த்து ரசிப்பதாக ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் அவர் படத்தின் சக்சஸ் மீட் குறித்து அறிவிக்க இருக்கிறாரா அல்லது அடுத்த படம் குறித்து அறிவிக்க இருக்கிறாரா என்று குழப்பத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். இதற்கிடையில் தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி தி லெஜன்ட் திரைப்படம் 10.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பைனான்சியர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு காரணமாக பல படங்கள் வெளியாகாமல் தேங்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக எந்த புது படமும் வெளியாகாத நிலையில் அண்ணாச்சியின் படம் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. இதனால் படம் வசூலை குவித்துள்ளதாக தெரிகிறது. போட்டிக்கு ஆளே இல்லாமல் அண்ணாச்சி முதல் படத்திலேயே சாதித்து காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.