டி.ஆர் இந்த எழுத்துக்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. 1980களின் தமிழ் திரையுலகின் சகலகலா வல்லவன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, டைரெக்ஷன் என அனைத்துமே தன்னுடைய கைவண்ணத்தில் செய்து மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். 1980ஆம் ஆண்டு வெளியான ” ஒரு தலை ராகம்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பாடல்கள் எழுதியும், இசைத்தும், வசனங்கள் எழுதியும் இருந்தார் டி.ஆர்.ராஜேந்தர்.

அறிமுகமில்லாத நடிகர்கள், புது இயக்குனர் என பெரிய விளம்பரமில்லாமல் வெளியான இந்த படம் அந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக அது அமைந்தது. பின்னர் தொடர்ந்து ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கை ஓர் கீதம், என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, எங்க வீடு வேலன், மோனிஷா என் மோனலிசா, காதல் அழிவதில்லை என பல வெற்றி படங்களை இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய படம் 2007ஆம் ஆண்டு வெளியான “வீராசாமி”.
தான் பணிபுரியும் அனைத்து படங்களிலும் அவரே எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து, பாடல்கள் எழுதி, படங்கள் வெளியிட்டு வித்தகராக இருந்தவர். இவருடைய படங்களில் அறிமுகமான நாயகிகள் அமலா, நளினி, ஜீவிதா, மும்தாஜ் போன்றோர் பின்னர் மிக பெரிய நாயகிகளாக மாறினர். இவருடைய மகன் சிம்புவை இவர் 1995ஆம் ஆண்டே உறவு காத்த கிளி என்ற குழந்தையாக அறிமுகம் செய்தார். பின்னர் தாய் தங்கை பாசம், எங்க வீடு வேலன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, பின் தந்தையின் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் சினிமாவில் ஒதுங்கி இருந்த டி.ராஜேந்திர் சில நாட்கள் முன்பு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் நெஞ்சு வலி காரணமாக இவர் அங்கு அனுமதிக்கப்பட்டதாக சிம்பு பின்னர் அறிக்கை வெளியிட்டார்.
கடந்த சில நாட்களாகவே தந்தை டி.ராஜேந்தரை அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக கூட்டி செல்ல சிம்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார். அமெரிக்கா நாட்டிலுள்ள புரூக்ளின் மாகாணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்ய இப்பொது சிம்பு அமெரிக்கா விரைந்துள்ளார்.
விசா பிரச்சனை நடுவில் ஏற்பட்டதால் கொஞ்சம் காலதாமதமாக அந்த பிரச்சனைகளை இப்போது முடித்து தந்தையை கூட்டிச்செல்ல ஆயுத்தம் ஆகி வருகிறார் சிம்பு. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரின் ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் வேண்டி வருகின்றார்.