தனது மெல்லிய இசையோடும் குரலால் பல உள்ளங்களை கவர்ந்தவர் திரு உன்னிகிருஷ்ணன் அவர்கள். இவர் பாடிய பல பாடல்கள் தமிழகத்தில் பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கின்றன. அந்த வகையில் வெளியான ஒரு பாடல் தான் வாலி படத்தில் வெளிவந்த நிலவை கொண்டு வா பாடல். 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படம் அஜித்தின் இரட்டை வேடங்களில் நடித்த ஒரு படமாகும். இதில் சிம்ரன் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் தான் நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை. இந்த பாடலில் அனுராதா ஸ்ரீராமும் உன்னிகிருஷ்ணனும் இணைந்து பாடியிருப்பார்கள். அனுராதா ஸ்ரீராம் ஹை பிச்சில் பாடி இருக்க உன்னிகிருஷ்ணன் சற்று குறைவாக லோ பிச்சில் பாடி இருப்பார்.

இதைப் பார்த்த விக்கல்ஸ் என்னும் யூடியூப் சேனல் உன்னிகிருஷ்ணனை கலாய்த்து இருந்தது. அதில் அனுராதா ஸ்ரீ ராம் உயிரைக் கொடுத்து ஹை பிச்சில் பாடிக் கொண்டிருக்க, காய்ச்சலுடன் போர்வை போர்த்திக் கொண்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு உள்ளே வரும் உன்னி கிருஷ்ணன் மிக லோ பிச்சில் பாடுவது போன்று அவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். இது பலரையும் சிரிக்க வைத்தது. மேலும் இந்த வீடியோ youtube-ல் ட்ரெண்டிங் ஆனது. இந்த வீடியோவை உன்னி கிருஷ்ணனுக்கும் சிலர் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த உன்னிகிருஷ்ணன் அது குறித்து பேசி உள்ளது வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த இன்ஸ்டா ரீல்ஸ் குறித்து பேசிய உன்னி கிருஷ்ணன் இந்த வீடியோவை மிக அழகாக செய்து இருக்கிறார்கள் என்றும், எங்கே இந்த வீடியோவை தனக்கு அனுப்பினால் தான் கோபப்படுவேன் என்று நிறைய பேர் பயந்ததாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்த வீடியோவை எனக்கும் நிறைய பேர் அனுப்பினார்கள். இந்த வீடியோவை பார்த்து நான் என்ஜாய் பண்ணி சிரித்தேன் என்றும், இப்போது உள்ள இளைஞர்கள் எப்படி எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். வீடியோவை பார்த்த பின்பு என் மனம் லேசாகிவிட்டது, அதேபோல் எவ்வளவு பேர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு சிரித்திருப்பார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இந்த பாடல் எடுத்த விதத்தைப் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். அப்போது அனுராதாவை தனி அறையிலும் தன்னை தனி அறையிலும் தேவா பாட வைத்ததாகவும், அனுராதா எப்படி பாடினார் என்பது கூட தமக்கு தெரியாது எனவும் அவர் கூறினார். மேலும் வாலி படத்தில் வந்த இந்தப் பாடலை நானும் என்னுடைய நண்பர் அனுராதாவும் சேர்ந்து பாடி இருக்கிறோம், அவரும் நானும் மிக நல்ல நண்பர்கள் என்றும் அவருடன் பாடிய ஆசை படத்தில் வரும் ‘மீனம்மா’ பாடல் தனக்கு இன்றும் பிடித்தமான பாடல் என்றும் உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.