மாநாடு படத்தின் மூலம் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிம்பு – கவுதம் மேனன் – ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையா படங்களின் பாடல்கள் மெகா ஹிட்டாகின.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலாக ‘காலத்துக்கும் நீ வேணும்’ இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டு இருந்தது. தாமரை எழுதியுள்ள இந்தப் பாடல் திங்க் மியூஸிக் யூடியூப் சேனலில் இப்பொழுது வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ஜெயமோகன் கதை எழுதியிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ஆண்டனியும் படத்தில் பணியாற்றியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் வெளியான படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 11 மில்லயன்ஸ் பார்வைகளை கடந்துள்ள இந்த டீசருக்கு சுமார் 4 லட்சம் லைக்குகள் யூடியூபில் கிடைத்துள்ளன.
மிகவும் இயல்பான தோற்றத்தில் கிராமத்து இளைஞனாக டீசரின் சில காட்சிகளில் வரும் சிம்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பக்கதை, த்ரில்லர் மற்றும் ஆக்சன் ஜேனரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது