தமிழ் உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பியை தற்போது ஹீரோவாக களமிறக்கி இருக்கிறார். அவர் நடிக்கும் முதல் படமான ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் பூஜை தற்போது நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

‘வெண்ணிலா கபடி குழு’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் ‘ராட்சசன்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். கோலிவுட்டில் தந்தை – மகன், தாய் – மகள், என்று இல்லாமல் அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை என்று குடும்ப வாரிசுகளும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் கூட ராகவா லாரன்ஸ் தனது தம்பியின் மெல்வினை ‘புல்லட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது விஷ்ணு விஷாலும் தனது தம்பி ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது.
இதில் ருத்ராவுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை மிதிலா பால்கர் நடிக்க இருக்கிறார். தர்புகா சிவா படத்திற்கு இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்புகள் நடக்கிறது.
அதன் பின்னர் கோவா உள்ளிட்ட சில இடங்களிலும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது. விஷ்ணு விஷாலைப் போலவே அவரது தம்பி ருத்ராவும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!