தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை பீகாரில் அமல்படுத்த மாட்டோமென அம்மாநில முலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக மற்றும் அதன் தாய் கட்சியான ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களுக்கு நீண்ட நாள் கனவான தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பாஜக நினைக்காத அளவிற்கு இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. நாட்டின் தலைநகரில் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது புதிய திருப்பமாக தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை பீகாரில் அமல்படுத்த மாட்டோமென பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருப்பது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட புதிய குடியுரிமை மசோதாவிற்கு இரு அவைகளிலும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் இக்கட்சியின் துணை தலைவரும், தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். ஆனால் எந்த ஒரு பதிலும் நிதிஷ் குமாரிடம் இருந்து வராததால் அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.
ஆனால், அவரது இராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் நிதிஷ் குமாரின் மாற்றத்திற்கு காரணம் என்று கூட சொல்லலாம். காரணம் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் சமகாலத்தில் வெற்றி முகத்தில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிரசாந்த் கிஷோரை ஏற்றுக்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக இருக்கின்றன. அடுத்த ஆண்டு பீகாரில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரு சட்டங்களையும் அமல்படுத்தினால், வாக்கு வங்கி கட்டாயமாக சிதறும். அதுமட்டுமில்லாமல் குடியுரிமை சட்டத்திற்கு பீகாரில் எதிர்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.