காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள தகவல் தொடர்பு நிலைகளை விரைவில் சரி செய்ய வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விசாரணையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனி பிரதேசமாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக கலவரம் எழாமல் தடுப்பதற்காக தகவல் தொடர்புகளை துண்டித்தது மத்திய அரசு. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து கூட வெளியுலகிற்கு தெரியாத சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள தகவல் தொடர்ப்பு துண்டிப்பு நடவடிக்கை அம்மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்படைய செய்து, பேரழிவை உருவாக்கி வருகிறது” என பதிவிட்டுள்ளது.
மேலும், “காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உரிமையையும், அம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரமிது” என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதிநிதிகள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து சட்ட விரோத செயல்களை தடுப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தகவல் தொடர்புகளை மத்திய அரசு துண்டித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் உள்பட 14 அமெரிக்க உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காஷ்மீரில் மனித உரிமை பிரச்சனையில் தீர்வு காணவும், தகவல்தொடர்புகளை துண்டிப்பை நீக்கவும் வலியுறுத்தினர். ஒரு மாத காலமாகியும், இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வரும் அக்டோபர் 22ஆம் தேதி அன்று, தெற்கு ஆசியா மற்றும் காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆசிய-பசிபிக் துணைக்குழு விசாரணை செய்ய உள்ளது.