சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடகா 15 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி கர்நாடகா இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக கர்நாடகாவில் நடைபெற்றுவந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாஜவின் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.

அப்போது கட்சியின் கொரடா உத்தரவை மீறி, கட்சி தாவி வாக்களித்ததால் குமாரசாமி ஆட்சியின் சபாநாயகர் ரமேஷ் 15 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களின் தொகுதிகள் காலியானது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல், ரோஷன் பெய்க், சிவராம் ஹெப்பார், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆனந்த்சிங் ஆகிய 12 பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 3 பேரும் என மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது பாஜவிற்கு 106 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் கூடுதலாக 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இந்த இடைத்தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.