
மதுரை அருகே உள்ள கீழடி என்ற கிராமத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பதும் மேலும் 300 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.மதுரை நகரத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி கிராமம், இந்த கிராமத்தில் 2014ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்தே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கிராமத்தில் மேலும் ஆய்வுகளை நடத்த கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பம் கொடுத்திருந்தார். இந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அதனை தொடர்ந்து , அங்கு அகழ்வாய்வை தொடரலாம் என மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் அதன் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் இதனை வெளியிட்டார்கள்.
கீழடி கிராமத்தில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற ஆய்விற்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டது . அதில் கிடைத்துள்ள முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கங்கை சமவெளியின் இரண்டாம் நகர நாகரீகம் அதாவது சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம் கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முறையாக கீழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளது . ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்ததாக தெரிந்து கொள்ள முடிகிறது.