புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி வடிவமைப்பிற்கான கூட்டம் நாளை (செப்.21) நடைபெற இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் மிக முக்கியமான கல்வி ஆலோசனைக் குழுவாகக் கருதப்படும் மத்திய ஆலோசனைக் குழுவின் பிரதிநிதிகளை நாளை நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.
புதிய கல்விக்கொள்கை திட்டம் வரையறை வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், அதன் இறுதி வடிவத்தை தயார் செய்யும் வேளையில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்துப் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அக்டோபர் இறுதிக்குள் கொள்கைக்கு இறுதி வடிவத்தை வழங்க நாங்கள் நினைக்கிறோம். நாளைய கூட்டத்தில் இதுபற்றி விவாதங்கள் நடைபெறும். வரைவு பொது மக்கள் மத்தியில் வைக்கப்பட்டபோது, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளும் புகார்களும் பெறப்பட்டன என தெரிவித்தார்.
2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் அறிக்கையின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை திட்டம் இடம்பெற்று இருந்தது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கை வரையறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்த வேண்டும்; இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும் போன்ற பல கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.