ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பாரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக அதிகார வட்டங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. ஆதலால், அங்கு கலவர வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சரூம், ஜம்மூ காஷ்மீர் மாநில மாநாடு கட்சியின் தலைவரும், மக்களைவை உறுப்பினருமான பாரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாகவும், தற்போது வீட்டு சிறை வைக்கப்பட்டுள்ள வீட்டினை துணை சிறையாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இச்சட்டத்தின் மூலம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக அவர் வீட்டு சிறையில் வைக்கப்படுவாரென உள்துறை துறை ஆலோசனைக் குழு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, உச்சநீதி மன்றத்தில் அப்துல்லாவை ஒப்படைக்குமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக உச்சநீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் பெரிதாகி கொண்டே செல்வதால் உள்துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரிவினை வாதிகள் மற்றும் தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டு வந்த நிலையில், மூன்று முறை முதலமைச்சராகவும், தற்போதைய மக்களவை உறுப்பினராகவும் இருக்கின்ற மிக பெரிய அரசியல் தலைவர் வீட்டு காவலில் சிறை வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மத்திய அரசின் இம்முடிவை விமர்ச்சித்துள்ள ராஷ்டியா ஜனதா தளம் கட்சியின் மாநிலங்கள் உறுப்பினர் மனோஜ், ஆட்கொணர்வு முறை என்பது ஒருவரின் சுதந்திரத்தை காப்பாறும் கருவியாகும். ஆனால் இதனை மத்திய அரசு மறுக்கிறது. மேலும், இது போன்ற விஷயங்களை இயல்பானதாக நம்ப சொல்கிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் “இயல்பு” என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை மாற்றி விடுங்கள் என்று தெரிவித்தார்.
இச்சட்டம் பாரூக் அப்துல்லாவின் தந்தை தன்னாட்சி பெற்ற ஜம்மூ காஷ்மீர் மாகாணத்தின் பிரதமரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சேக் அப்துல்லாவால் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.