11 எம்.ஏ.எல்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மறைந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். அதன் பின்னர் ஆட்சிமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்.
அதன் பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பி.எஸ் தலைமையில் மொத்தம் 11 எம்.எல்.ஏக்கள் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம் அடுத்தகட்ட விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
அப்போது, பேரவைத் தலைவர் இந்த விவகாரத்தில் எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறார்? இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க வேண்டும். தகுதி நீக்கக் கோரும் மனுவை பேரவைத் தலைவர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. இதில் நடவடிக்கை எடுக்க 3 ஆண்டுகள் தாமதம் தேவையற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.