
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 60 வருடங்களாக மக்கள் அனைவரும் பட்டாசுகளை வெடிக்காமல் தியாகம் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் திருப்பத்தூர் அருகில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ஆகும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கண்மாயில் இருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாட்டில் இருந்து வருடந்தோறும் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. இது சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பறவைகள் வருடம் தோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கத்தைச் செய்து பின்னர் தங்கள் குஞ்சுகளுடன் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கே சென்றுவிடும். ஆதலால் பறவைகளின் நலனுக்காக அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்த பண்டிகையின் போதும் பட்டாசு வெடிப்பதில்லை. இது இப்பொழுது சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகிறது.
கடந்த ஆண்டு மழையின் அளவு குறைந்து காணப்பட்டதால் பறவைகள் அதிக அளவில் வரவில்லை. ஆனால் இந்த ஆண்டில் மழைத் தொடங்கிவிட்டதால் பல வகையான பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ளன. சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை போன்ற பறவைகள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. ஆதலால் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.