
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கி விட்டது. இதையடுத்து வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக சென்னை உள்பட வட கிழக்கு மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், அது தீவிரமாகும் நிலையில் வருகிற 21, 22-ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைவதால் வருகிற 21 (திங்கட்கிழமை), 22-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம்- 12 செ.மீ, வேடச்சந்தூர்- 7 செ.மீ. குமாரபாளையம், சத்தியமங்கலம், சங்கரன்கோவில், மேட்டுப்பாளையம் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.