கடந்த ஒரு மாதத்தில் குற்ற பின்னணி உள்ள 86 ரவுடிகளை கைது செய்திருப்பதாக காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி கூறுகையில், “மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 போ் கடந்த ஒரே மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர தலைமறைவாக உள்ள மேலும் சிலரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. அவா்களில் பலரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்கள் பலவற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் போலீஸ் நண்பா்கள் குழு, ஊா்க்காவல் படை ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. போலீஸ் நண்பா்கள் குழுவில் கூடுதலாக ஆட்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டத்தில் 210 பள்ளிகளில் மாணவா் காவல்படை தொடங்கப்பட்டு அவற்றில் 9,240 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் காவல் நிலையங்களின் செயல்பாடுகள், சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் ஆகியவை குறித்து விரிவாக கற்றுத் தரப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.