
லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ மூலமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி7எக்ஸ் கட்டமைப்பு கொள்கையின் முற்றிலும் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது புதிய டிஃபென்டர். அலுமினியம் மோனோகாக் சேஸீயில்தான் புதிய டிஃபென்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட இந்த சேஸீ மூன்று மடங்கு அதிக செயல்திறனையும், உறுதித்தன்மையையும், இலகுவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி 90 மற்றும் 110 என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், 90 மாடலானது ஆறு சீட்டர் மாடலாகவும், 110 மாடலில் ஏழு பேர் செல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கும்போது 1,075 லிட்டர் கொள்ளலவு கொண்ட பூட் ரூம் இடவசதியையும், இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால் 2,380 லிட்டர் பூட்ரூம் இடவசதியையும் பெற முடியும்.புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி சிறந்த ஆஃப்ரோடு மாடல் என்பது தெரிந்த விஷயம்தான். புதிய தலைமுறை மாடலானது 900 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளையும் கடந்து செல்லும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றுள்ளது.
இந்த கார் 3,720 கிலோ எடையுடைய ட்ரெயிலரை இழுத்துச் செல்லும் திறனையும் பெற்றிருக்கிறது.இதன் கூரையில் மட்டும் 300 கிலோ எடையை தாங்கும் சக்தி வாய்ந்த மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியானது 291 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதனால், எந்தவொரு சாலைகளையும் சாதாரணமாகவே கடந்து செல்லும். ஏற்ற, இறக்கமான சாலைகளிலும் வெகு எளிதாக முன்னேறுவதற்கும், இறங்குவதற்குமான வடிவமைப்பு சிறப்புகளை இந்த கார் பெற்றுள்ளது.
இந்த கார் பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின்கள் என 4 விதமான தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பிளக் இன் ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது .